மனித மனம் நனவு, நனவடங்கு, நனவிலி அடுக்குகளாலும் இட், ஈகோ, சூபர்ஈகோ செயலிகளாலும் அமைந்தது என்கிறார் ஃப்ராய்ட். இவை அனைத்தையும் ஒருசேர நனவிலியாகக் கண்டவர் ழாக் லக்கான். இந்த நனவிலி, மொழியால் இயக்கப்படுவதை அறிந்து, உளச் செயற்பாடுகளை மொழியியல் வழியில் புரிந்துகொள்கின்ற ஒரு புதிய பார்வையை நமக்கு வழங்குகிறார் அவர். அத்துடன் மனித வாழ்வை நனவிலிக்குள் அழுத்தியது மொழி எனக் கண்டு, ஃப்ராய்டிய உள அமைப்பை மாற்றியமைத்தார். இதனால், பின்அமைப்பியலில் ஃப்ராய்டியம் புதிய பரிமாணம் அடைந்தது. ‘முன்பின் தெரியாத யாரோ ஒருவர் நம்மை இயக்குகிறார்; அவரின் விருப்பங்களை நமது விருப்பங்களாகக் கொண்டு, அவரைத் திருப்திப்படுத்தவே உழல்கிறோம்; அந்த மூன்றாம் நபரை எந்த வழியிலும் நிறைவாக்க முடியாததால், உள்ளத்தில் குறையுடன் நாம் வாழ்கிறோம்.’ இவை எப்படி நடக்கின்றன என்பதை ஆராய்ந்தவர் லக்கான். ‘எனக்கு வெளியில்தான் நான் இருக்கிறேன்’ என்பது லக்கானிய முகவரி. மொழிமனம் கொண்ட மனிதனின் கனவு முதல் பாலுறவு வரை யாவும் மொழிச் செயல்பாடுகளே என்றும் நிறுவுகிறார் லக்கான். ‘எங்கே நான் இல்லையோ அங்கிருந்து பேசுகிறேன்’, ‘நாம் மொழியைப் பேசவில்லை; மொழிதான் நம்மைப் பேசுகிறது’, ‘தந்தையைவிடத் தந்தைப் பெயரே முக்கியம்’, ‘இடிபஸ் சிக்கலிலிருந்து மொழிமனிதனால் விடுபட முடியாது.’ இப்படி, மிகவும் சிக்கல் வாய்ந்த லக்கானின் கருத்தாக்கங்களை ஆழமாகவும் எளிமையாகவும் தமிழில் முன்னெடுக்கிறார் தி கு இரவிச்சந்திரன். இதன் மூலம் தமிழில் தனித்துவம் மிக்கதோர் இடத்தைப் பெறுகிறது இந்த நூல். இதை நீங்கள் வாசிப்பதன் மூலம் உங்களின் உளப் பிரச்சினைகள் தாமாகவே குறைவதை உணரலாம்; தெளிவான கனவுகளையும் காணலாம்.
LKR4,875.00
4 in stock