அமெரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மாமனிதர்கள் பலர். அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட அவர்களது விடுதலைக்கும், பெண்களின் உரிமைக்களும் போராடிய சொஜோர்னர் ட்ரூத், மாயா ஏஞ்சலு, ஏஞ்சலா டேவிஸ்; கலப்பினத்தவர்களான பிரெடெரிக் டக்ளஸ், டபிள்யு. ஈ. பி.டுபோய்ஸ்; 1920களிலும் 1930களிலும் இருந்த அமெரிக்கக் கம்யூனிஸ்ட் தலைவர்கள்; 20ஆம் நூற்றாண்டில் போர்க்குணமிக்கவர்களாக இருந்த கறுஞ்சிறுத்தை இயக்கத்தினர்; மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ் ஆகியோர் வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள், எனினும் அவர்கள் எல்லோரைக் காட்டிலும் இன்று உலகின் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் எல்லோருக்கும் பெரும் ஆதர்சமாகத் திகழ்பவர் மால்கம் எக்ஸ்.
இனவெறி வெள்ளையர்களுக்கான மதமாக அமெரிக்கக் கிறிஸ்துவம் செயல்படுவதை உணர்ந்து இஸ்லாமை அவர் தழுவியது ஒரு சமூகப்புரட்சி என்றால், பின்னாளில் அதையும் கடந்து ஒன்றோடொன்று பிணைந்துள்ள இனவெறியையும் ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்க “எந்த வழிமுறையையும் பின்பற்றத் தயங்க மாட்டேன்” என்று சூளுரைத்தது அரசியல் புரட்சியாகும். அவரை அமெரிக்க ஏகாதிபத்திய முகவர்கள் சுட்டுக்கொன்றுவிடுவதில் வெற்றியடைந்தனரேயன்றி, அவரது புரட்சிகரக் கருத்துகளை அவர்களால் அழிக்க முடியவில்லை.
அந்த மாபெரும் போராளியின் வரலாற்றைத் தமிழில் தொடராக எழுதி நூலாக்கி, அதன் மூன்றாம் பதிப்பையும் நமக்குத் தருகின்றார் வி.சி.க.வின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், அறிவுப் புலமை மிக்கவருமான ரவிக்குமார். இந்த நூல் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் தன்மான விடுதலை உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் முக்கிய கருவிகளில் ஒன்றாகத் திகழட்டும்.