இசங்களின் வரிசையில் ராஜபக்சேயிசத்தையும் சேர்த்துவிடலாம். 1970ம் ஆண்டு ஒரு சதாரண பாராளுமன்ற உறுப்பினராய் அரசியலில் பிரவேசம் கண்டு, படிப்படியாய் பருத்து, அதிபராகி உச்சம் தொட்ட மகிந்த ராஜபக்சே, 2009ம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் பெரும்பான்மைச் சிங்கள மக்களால் கடவுள் நிலமைக்குப் பூஜிக்கப்பட்டார். கூடவே அவரின் சகோதரர்களும், புத்திரர்களும், சிறுதெய்வ அந்தஸ்துப் பெற்றார்கள்.
கடவுளர்களின் அமுதவாக்குகளிலும், அற்புத அறிக்கைகளிலும் லயித்து இருந்த மக்களுக்கு ஒரு கட்டத்தில் பக்தியை விட பசிதான் பெரிது என்று ஆனது. பொருளாதாரப் பேரழிவு வாட்டி எடுத்தது. கடவுளர்களால் எந்தவொரு திடீர் வரத்தையும் வழங்கி மக்களைச் சாந்தப்படுத்த முடியவில்லை.
சுதந்திரத்திற்கு முன்னைய காலப்பகுதியில் இருந்து இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்சே குடும்பம் அண்மையில் சரிந்து முற்றாய் நிர்மூலமான பின்புலத்தை ‘ப்ரோ’ விபரிக்கிறது. கடந்த வருடம் மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் ‘ப்ரோ’ தொடர்ச்சியாய் வெளிவந்த போது வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.
இலங்கைப் பொருளாதார வீழ்ச்சியின் சமகால சாட்சியாய் அமைந்த ‘குற்றவாளிகளின் தேசம்’ எழுத்தாளர் ஸஃபார் அஹ்மதின் இரண்டாவது புத்தகம் இது. ஸஃபார் அஹ்மத் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் ஏரோநாட்டிகல் மெனேஜ்மென்ட் பிரிவில் அசிஸ்டன்ட் மெனேஜராய்ப் பணிபுரிபவர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ச்சியாய் அபுனைவுக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.