மனிதனின் மிகப் பழைய பழக்கம்” காதல், அந்தக் காதலைப் புதிய பழக்க மொன்றின் சுவாரஸ்யமான தடுமாற்றங்களுடன் திக்குமுக்காடச் செய்கின்றன இளங்கோ கிருஷ்ணனின் இந்தக் கவிதைகள். பொறுமை, நிதானம், அமைதி எனக் காதலில் கடைபிடிக்கவே முடியாத லட்சணங்களை இந்தக் கவிதைகள் கைக்கொள்ளப் பிரயத்தனப்படுகின்றன; பரிதவிக்கின்றன; பதற்றப்படுகின்றன. காதலின் திருக்கோயிலில் கடவுளும் பிசாசுமான ‘அவளிடம் மன்றாடுகின்றன; புலம்புகின்றன.
காதலின் வறுமையைக் கடக்கத் தெரியாமல் கவிதைகளிடமே சொல்லிப் பிதற்றுகிறான் கவிஞன். ‘கெட்டிக்காரத்தனமில்லா ஓர் எளிய கவிஞன் வேறு என்ன செய்வான்?
லட்சியவாதம் தோற்று சித்தாந்தங்கள் குழப்பமடைந்து வரும் 21ஆம் நூற்றாண்டு வாழ்க்கையிலிருந்து பேதமை நிறைந்த இந்தக் கவிதைகள் உங்களைச் சொஸ்தப்படுத்தும்,
நண்பர்களே, உங்கள் பகுத்தறிவுச் சித்தாந்தங்களால் இந்தக் கவிதைகள் விமர்சனத்துக்கு உள்ளாகலாம். ஆனால் சிறுதெய்வ வழிபாட்டின் எளிய நம்பிக்கையைப் போல உங்கள் வாழ்க்கையில் ஒளிவீசக்கூடியவை இளங்கோ கிருஷ்ணனின் இந்தக் காதல் கவிதைகள்.