இந்த நூல் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் பாகத்தில், இந்நிலப் பகுதியின் பின்புலத்து வரலாறு முழுவதும் தொகுக்கப்பட்டுள்ளது. மனிதகுலம் ஆரம்பித்த காலத்திலிருந்து 1900ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இருந்த ஓட்டோமான் பேரரசின் இறுதிக்காலம் வரை இந்தப் பகுதியில் விளக்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தில், இந்த மக்களைப் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. பாலஸ்தீன மக்களைப் பற்றியும், சியோனிசம் என்பதைக் கண்டுபிடித்த ஐரோப்பிய யூதர்கள் பற்றியும், இஸ்ரேல் நாட்டை அவர்கள் உருவாக்கி ஆரம்பித்தவிதம் பற்றியும் பேசப்படுகின்றது. இறுதி பாகத்தில், இந்தப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்திலிருந்து இன்றைய நிலைவரை நடந்தவைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது.
நான் இந்தப் போராட்டத்தையும் அதன் வரலாற்றையும் எவ்விதப் பாகுபாடும், பாரபட்சமும் இல்லாமல் உங்கள் முன் நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளேன். அனைத்தையும் தான் சார்பின்றி சிரத்தையோடு வெளியிட்டாலும் அதன் வெற்றியைத் தீர்மானிக்கப் போவது வாசகர்களாகிய நீங்கள்தான்.