சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவத்தம்பி அவர்கள் சுமார் ஒரு மாத காலம் பெர்க்லிக்கு வந்திருந்தபோது அவரோடு கணிசமான நேரத்தைச் செலவிடும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரை அறிந்த எவரும் மறக்க முடியாத அளவுக்கு அணுக்கமும் வசீகரமும் நிரம்பிய அசாதாரணமான மனிதர் அவர். அங்கு நானும் ரிச் ஃப்ரீமெனும் மட்டும்தான் பார்வையாளர்களாக இருந்தோம். அசாதாரணமான சிந்தனையாளர் ஒருவரின் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என நாங்கள் இருவருமே உணர்ந்தோம். அவர் பெர்க்லியை விட்டுப் போன பிறகு இலங்கையில் யுத்தம் தீவிரம் பெற்றுவிட்டது. சிந்தனையாளராக மட்டுமின்றி ஒரு அரசியல்வாதியாகவும் இருந்த அவரும் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும் என நான் கவலையுற்றேன். அடுத்து அவரை சந்தித்தது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போதுதான்.
அன்றைய முதல்வரை அவர் தங்கியிருந்த விடுதியின் அறையில் சந்திக்கப் போயிருந்தபோதுதான் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். சிவத்தம்பி மாறவே இல்லை. முதல்வருக்கு உவப்பளிக்காத, ஆனால் சொல்லியே ஆகவேண்டிய பல விஷயங்களை அவர் பேசிக்கொண்டே போனார் முதல்வரிடம் பேசியபோது சிவத்தம்பியின் ஆளுமை எப்படி வெளிப்பட்டது என்பது இப்போதும் என் நினைவில் இருக்கிறது.
ஜார்ஜ் எல் ஹார்ட்