செப்பேடுகள் பொய்யானவை; கல்வெட்டுக்கள் நம்பத்தகாதவை: அந்திய நாட்டினர் எழுதியுள்ள குறிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அண்மைக்காலமாகச் சிலர் பலவாறாகப் புலம்ப ஆரம்பித்துள்ளனர். இத்தகைய கயவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி, தமிழ்நாட்டினுள்ள பெருவாரியான வளமான நிலங்கள் சைவ வைணவ மடங்களிடம் எப்படி வந்து குவிந்தன என்பதைத் தான். அன்றி. சுதந்திரத்திற்குப் பிறகான சமூகப் பொருளாதார மாற்றங்களின் விளைவாக எந்த வர்க்கங்கள் தங்களை அரசியல், பொருளாதாரத்தில் வனுப்படுத்திக்கொண்டன என்பதைப் பற்றியும் அவர்கள் பேசுவதில்லை. இப்படிப் பேசுகின்றவர்கள் தங்களின் பேச்சுக்கான எவ்விதமான தர்க்கநியாயத்தையும் கைக்கொள்வதில்லை. பித்துப்பிடித்த மனநிலையில் உளறுகின்றனர். இத்தகைய உளறல்களின் அபத்தத் தன்மையைத் தோலுரித்துக் காட்டுவதாக என் எழுத்துகள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பொ.வேல்சாமி
பழந்தமிழகத்தில் பெண் விற்பனை: ஆறுமுகநாவலர் ஏன் தமிழ்த் தாத்தாவாக ஆகவில்லை? மூத்த அண்ணன் இளைய தம்பியான கதை: உ.வே.சா.வின் அறியப்படாத நூல்கள்; அடிமைகளுக்குள் சாதியில்லை; திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பதிப்புக்கு வந்த கதை: ஐரோப்பியர்களால் வாழ்வும் வளமும்பெற்ற சமஸ்கிருதம்; தமிழர்கள் தரங்கெட்டவர்களா? கொள்ளையர்களே ஆட்சியாளர்களான வரலாறு: சோழர் காலத்தில் சமஸ்கிருதக் கல்லூரிகளே இருந்தன: கல்வியில் சிறந்திருந்த பழந்தமிழ் மக்களைக் கைநாட்டுகளாகவும் தற்குறிகளாகவும் மாற்றியது சாதியா சமயமா? என இப்படிப் பல்வேறு வரலாற்றுப் புதிர்களை விளக்கும் தகவல் களஞ்சியமாக இந்நூல் உள்ளது. மொழி, இலக்கண, இலக்கிய, பதிப்பு, அரசியல், பொருளாதாரம், சமயம் உள்ளிட்ட நிறுவனங்களின் வரலாற்றை விளங்கிக்கொள்ள அடிப்படையான பனுவலிது. இத்துறைகளில் ஆய்வுகளை நிகழ்த்திட பல ஆய்வுக் களங்களை உருவாக்கித் தந்துள்ளார் பொ.வேல்சாமி.