த மிழ்த் தேசிக அடையாளங்களில் ஒன்றாகிய நாடகத்தமிழ் ஆக்கத்தில் சிலப்பதிகாரம் அரங்கத் திறம் அறிதல் மிக மிக அவசியமாகிறது. அரங்கத் தமிழ்ச் செயற்பாட்டில்தான் நாடகத்தமிழ் முழுமை பெறுகிறது. ஆனால், சிலப்பதிகாரம் அரங்கச் செயற்பாடு பற்றிய பல விடயங்கள் இன்றுவரை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாதுள்ளன.
ஆடுகளத்தில் நாடகத்தமிழ் காணவிழையும் ஓர் அரங்கருக்குப் பல வேளைகளில் சிலப்பதிகாரம் அரங்கச் செயற்பாடுகளுக்குக் கூறப்பட்ட விளக்கங்கள் குழப்பமாகவே உள்ளன. அவற்றை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இக் குழப்பங்களையும் சிக்கல்களையும் எதிர்கொண்டு சிலப்பதிகாரம் அரங்கத் திறம் அறிய வேண்டி உள்ளது. இங்குதான் நாடகத்தமிழ், குறிப்பாக அரங்கத் தமிழுக்கான தோற்றுவாய் உள்ளது. அரங்கத்தமிழ் என்பது நாடகத்தமிழுக்கான அரங்கமொழி இலக்கணம். தமிழ் அரங்கமொழி இலக்கணத்தின் தனித்துவமான கூறுகளை மீள்காண வேண்டியுள்ளது. அவை அரங்காற்றுநர் பயிற்றுகளாகவும், அரங்கர் அறிவுடைமைகளாகவும், அரங்கக் கோட்பாடுகளாகவும், முழுமையாக அரங்காக்கச் செயற்பாடுகளாக அமையும்.