இந்தியா திரும்பியோரின் உண்மைக் கதைகளை ‘பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும் (எனது கொடைக்கானல் மனிதர்கள்)’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார் எல்.ஜோதிகுமார்.
இலங்கையின் மலையகத்தில் வாழும் அவர் அந்த மக்களின் வாழ்வோடு தமது செயலாலும் எழுத்தாலும் கலந்து கிடக்கிறார். அவரது சொல்லும் முறையும் மொழிநடையும் சமூகத்தைப் பார்க்கும் முறையும் தனித்தன்மையானவை. இலங்கையின் மலையகத்தில் இருந்து வெளிவந்த ‘தீர்த்தக்கரை’ இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராயும் பின்னர் ‘நந்தலாலா’ இதழின் ஆசிரியருமாகவும் செயற்பட்டவர்.
ஜெயமோகனின் ‘வெள்ளையானை’ நகர்த்தும் அரசியல்: (இலக்கிய விமர்சனங்கள்), எனும் நூலில் அவரது ஞானச்செறிவுள்ள இலக்கிய விமர்சனங்கள் உள்ளன. பல பத்தாண்டு்களாக தமிழாக்கம் செய்யப்படாது இருந்த, ‘The Other Fires’ எனும் மாக்சீம் கார்க்கியின் கடைசி நாவலை ‘இன்னும் சில கங்குகள்’ எனும் பெயரில் எழுத்தாளர் நிழல்வண்ணனோடு இணைந்து தமிழுக்கு அளித்துள்ளார்.
உழைக்கும் மக்களின் இலக்கிய ஆளுமைகளான, மறைந்த பேராசிரியர் இன்குலாப், எழுத்தாளர் வல்லிக்கண்ணன், இலங்கை எழுத்தாளர் கே.கணேஷ் உள்ளிட்டோரை அவர் எடுத்த நேர்காணல்கள் மிகவும் முக்கியமானவை.‘தீண்டாத வசந்தம்’ நூலுக்கு மிகச்சிறப்பான முன்னுரையை அளித்தவர். அவரது எழுத்துகளில் வெளிப்படும் ‘கூர்மையான பார்வை’ தமிழ் இலக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம். இந்நூலின் கட்டுரைகளை்யும் ‘தமிழ் உலகுக்கு ஒரு கொடை’என்று கூறினால் மிகை ஆகாது.