தோற்றுவாய் எக்ஸ்-ரே (X-ray)
எனப்படும் கதிர்களைக் கண்டுபிடித்து இன்னும் எழுபது ஆண்டுகள் ஆகவில்லை. அவற்றைக் கண்டு பிடித்தவர் ரென்ட்கென் (Roentgen) என்பவர். அவர் அக் கதிர்களைக் கண்டுபிடித்தபோது அவற்றின் தன்மை என்ன என்பது அவருக்குச் சற்றும் விளங்கவில்லை. தெரியாத பொருள்களையோ, மனிதர்களையோ குறிப்பிடுவதற்கு, ஆங்கிலத் தில் ‘எக்ஸ்’ (X) என்னும் எழுத்தை வழங்குவது வழக்கம். அந்த வழக்கப்படி, தன்மை புலப்படாத இந்தக் கதிர்களுக்கு ‘ எக்ஸ்ரே’ என்று அவரால் பெயர் வைக்கப்பட்டது. ‘ரே’ என்னும் சொல்லுக்குக் கதிர், கிரணம் (ray) என்பது பொருள். இக் கதிர்களைக் கண்டுபிடித்து மூன்று மாதங்கள் ஆவதற்குள் இவற்றின் ஆற்றலைப்பற்றி விஞ்ஞானிகள் ஆங்கங்கே வியப்போடு பேசிவந்தார்கள். சாமானிய மக்கள் அவ் விஞ்ஞானிகளின் பேச்சை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, மிக்க வியப்போடு திகிலும் அச்சமும் அடைந்தார்கள். மனிதனுடைய உடலின் உட்புறத்திலே இருக்கும் எலும்புகளையும், பெட்டிக்குள் இருக்கும் பொருள்களையுங்கூட எக்ஸ்ரேயின் உதவியால் படம் பிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறக் கேட்டார்கள். இவற்றைப் போன்ற செயல்களை அக் கதிர்கள் செய்யக்கூடுமானால், தாங்கள் இனிமேல் அமைதியாகவும் அந்தரங்கமாகவும் வாழமுடியாது என்று மக்கள் அஞ்சினார்கள். பொதுமக்கள் மட்டுமல்லாமல், சில பத்திரிகைகளும் அவ்வாறே குழப்பமுற்று, எக்ஸ்-ரேயை அவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாகாது என்று கண்டித்து எழுதின. அக் காலத்தில் லண்டன் (London) நகரிலிருந்து வெளிவந்த பத்திரிகை ஒன்றில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருந்தது: “எக்ஸ்-ரேயின் பெயரைக் கேட்டவுடனேயே எரிச்சல் வருகிறது . எக்ஸ் – ரே என்ற ஒன்றை ஒருவர் கண்டுபிடித்தது