இலக்கியமென்றால் பெரும் தவமென்றும் வரமென்றும் தரிசனமென்றும் கதைவிட்டுக் கொண்டிருக்கிற இலக்கியச் சூழலில் கந்தர்வனின் எழுத்துக்கள் இருளில் அகப்பட்டுக் கிடப்பவனுக்கான வெளிச்சக்கீற்று. கந்தர்வன் கதைகளில் உலவுகிற மனிதர்கள் பெரும்பாலும் கிராமத்து மனிதர்கள். அம் மனிதர்களோ வர்ணத்தின் அடிப்படையிலும், வர்க்கத்தின் அடிப்படையிலும் அடித்தட்டு மக்களாக வாழ நிர்பந்திக்கப் பட்டவர்களாகவும்,உழைக்கும் மக்களாகவும், ஆணாதிக்கப் பிடியில் சிக்குண்டு கிடக்கும் பெண்களாகவும் குழந்தைகளாகவும் இருக்கிறார்கள்.
வெறுமனே கந்தர்வனின் எழுத்துகள் காலத்தின் கண்ணாடியாக மட்டுமில்லாமல் அவர் வாழ்ந்த காலத்தின் மனசாட்சியாக உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, பெண்ணுரிமைக் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துகிற எழுத்துகளாகவே இருக்கின்றன.